‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு’:பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி புகழாரம்


‘ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு’:பிரணாப் முகர்ஜிக்கு அத்வானி புகழாரம்
x
தினத்தந்தி 9 Jun 2018 12:00 AM GMT (Updated: 8 Jun 2018 10:18 PM GMT)

பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று நிகழ்வு என அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்றது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விழாவில் அவர் பங்கேற்றது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார். அந்த அறிக்கையில் அவர் விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜிக்கும், அவரை அழைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கும் புகழாரம் சூட்டி உள்ளார்.

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு பிரணாப் முகர்ஜி சென்றதும், தேசியவாதத்தின் உன்னதத்தையும், கொள்கையையும் வெளிச்சம் போட்டு காட்டியதும் நமது நாட்டின் சமகால வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு என அத்வானி குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரணாப் முகர்ஜியும், மோகன் பகவத்தும், சித்தாந்த சார்புகளையும், வேறுபாடுகளையும் கடந்து உண்மையிலேயே ஒரு மதிப்புக்குரிய எடுத்துக்காட்டை உருவாக்கி உள்ளனர் என்று நான் நம்புகிறேன் எனவும் அத்வானி அதில் தெரிவித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி தனது பெருந்தன்மையையும், நல்லெண்ணத்தையும் காட்டி விட்டார் என்றும் அத்வானி பாராட்டி உள்ளார்.

Next Story