காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் இன்னும் உறுப்பினரை நியமிக்கவில்லை: 12-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து மத்திய அரசு உத்தரவு


காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் இன்னும் உறுப்பினரை நியமிக்கவில்லை: 12-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 10 Jun 2018 12:15 AM GMT (Updated: 9 Jun 2018 9:11 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு இன்னும் உறுப்பினரை நியமிக்காததால், தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், 12-ந் தேதிக்குள் உறுப்பினரை நியமிக்குமாறு கர்நாடகத்துக்கு மத்திய அரசு ‘கெடு’ விதித்து இருக்கிறது.

புதுடெல்லி, 

காவிரி பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தின் அடிப்படையில், காவிரி நீர் பங்கீட்டுக்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவையும் உடனடியாக அமைத்து அதுபற்றிய அறிவிப்பை அரசிதழில் வெளியிடுமாறு கடந்த மாதம் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை குறித்த அரசின் அறிவிப்பு மத்திய அரசிதழில் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.

மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் ஒரு தலைவர், 2 முழுநேர உறுப்பினர்கள், 6 பகுதிநேர உறுப்பினர்கள் பணியாற்றுவார்கள். இதில் தலைவரையும், 2 முழுநேர உறுப்பினர்கள் மற்றும் 2 பகுதிநேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்கும்.

மீதம் உள்ள 4 பகுதி நேர உறுப்பினர்கள் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த மாநிலங்கள் தலா ஒரு பகுதி நேர உறுப்பினரை பரிந்துரைக்க வேண்டும்.

இதேபோல் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவில் காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர உறுப்பினர் (நீர்வளம்) தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணைய செயலாளர், உறுப்பினர்செயலாளராகவும் இருப்பார்கள். இவர்களுடன் 7 உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள்.

இந்த 7 பேரில் 3 பேரை மத்திய அரசு நியமிக்கும். அதாவது, இணைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள வானிலை ஆராய்ச்சித்துறை அதிகாரி ஒருவர், தலைமை என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறையாத மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர், கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத வேளாண்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமிக்கும். மீதம் உள்ள 4 உறுப்பினர்களை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தலா ஒருவர் வீதம் பரிந்துரைக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்கும் பணிகளை மத்திய அரசு உடனே தொடங்கியது.

மாநிலங்கள் சார்பிலான உறுப்பினர்களை காவிரி நீர் பங்கீட்டில் உரிமையுள்ள மாநிலங்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பினார்.

அதன் அடிப்படையில் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவுக்கு நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமாரையும் உறுப்பினர்களாக நியமிக்க பரிந்துரைத்தது.

இதேபோல், புதுச்சேரி அரசும், கேரள அரசும் தங்கள் தரப்பிலான உறுப்பினர்களை பரிந்துரைத்தன.

இதற்கிடையே, மத்திய அரசும் தனது சார்பிலான நிர்வாகிகளை நியமித்தது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இடைக்கால தலைவராக மத்திய நீர் ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் பிற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடக அரசு மட்டும் தங்கள் சார்பிலான உறுப்பினர்களின் பெயரை இன்னும் பரிந்துரைக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங் காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டால்தான், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு காவிரி நீரை பகிர்ந்து அளிக்க முடியும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பாசனத்துக்காக தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்காமல் தாமதப்படுத்தி வருவதால் இந்த இரு அமைப்புகளையும் ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்துக்கு முறைப்படி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் பெயர்களை வருகிற 12-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) பரிந்துரைக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி. சிங் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனப் பணிகள் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவில் மத்திய வேளாண்துறை அமைச்சக அதிகாரி மட்டும் இன்னும் நியமிக்கப்படவில்லை. விரைவில் அவர் நியமிக்கப்படுவார்.

கர்நாடக அரசு இன்னும் உறுப்பினர்களை பரிந்துரைக் காமல் உள்ளது. அங்கு மந்திரிகள் நியமனம், இலாகா ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்சினை இருந்ததால் உறுப்பினர்களை அவர்களால் பரிந்துரைக்க முடியவில்லை. தற்போது அந்த பிரச்சினை தீர்ந்ததாக கூறப்படுகிறது.

எனவே, உறுப்பினர்களை உடனே பரிந்துரைக்குமாறு கூறி இருக்கிறோம். வருகிற 12-ந் தேதிக்குள் உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு கர்நாடகத்துக்கு ‘கெடு’ விதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அரசு தங்கள் தரப்பில் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைத்தவுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்ட தேதியை முடிவு செய்து அறிவிப்போம்.

இவ்வாறு யு.பி.சிங் கூறினார்.

Next Story