பீகார்: ஐ.ஐ.டி தேர்வில் சூப்பர்-30 மாணவர்கள் சாதனை


பீகார்: ஐ.ஐ.டி தேர்வில் சூப்பர்-30 மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 10 Jun 2018 2:56 PM GMT (Updated: 10 Jun 2018 2:57 PM GMT)

சூப்பர்-30 குழுவில் பயிற்சிப்பெற்ற 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளனர். #Bihar #Super30 #IITExam

பாட்னா,

ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30' குழுவில் பயிற்சிபெற்ற 30 மாணவர்களிடையே 26 மாணவர்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( IIT) - கூட்டு நுழைவுத் தேர்வு (JEE.) -ல் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவில், ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1973-ம் ஆண்டு பிறந்தவர் தான் ஆனந்த குமார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "சூப்பர் 30" என்னும் பயிற்சி மையம் மூலம் பயிற்சியளித்து, தன் பயிற்சி மையத்தில் இருந்து ஆண்டிற்கு 98% மாணவர்களை ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற செய்கின்றார்.

இதுகுறித்து சூப்பர் 30 நிறுவனர் ஆனந்த் குமார் கூறுகையில், ‘இந்த ஆண்டு எனது பயிற்சி நிலையத்தில் பயிற்சிப்பெற்று தேர்வு எழுதிய 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து அடுத்தாண்டிற்கான பயிற்சிவகுப்பில் 90 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க உள்ளேன்’ என அவர் தெரிவித்தார். மேலும் திறமை இருந்தபோதிலும் தனது சிறுவயது கனவுகள் பலிக்காமலேயே போனது, இதனால் தனது கனவினைப் போல் இளம் மாணவர்களின் கனவு வெறும் கனவாகவே போய்விடக் கூடாது என ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சூப்பர் 30 குழுவின் மாணவர் யாஷ் குமார் கூறுகையில், "எனது தந்தை ஒரு எலக்ட்ரானிக் கடையில் விற்பனையாளராக உள்ளார், IIT-JEE Advanced 2018 -ல் வெற்றி பெற்றது எனக்கு மிகப்பெரிய சாதனையாக உள்ளது. சூப்பர்  30-ல் கற்றுகொள்ளும் சூழல் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனந்த் சார் எங்களுக்கு எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருந்தார்" என கூறினார்.

ஐ.ஐ.டி, JEE Advanced 2018-க்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. இந்த ஆண்டு மே 20-ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வில் மொத்தம் 155158 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 18138 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story