பிரதமருக்கு மிரட்டல் கடிதம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய கூடாது; மத்திய மந்திரி அத்வாலே கண்டனம்


பிரதமருக்கு மிரட்டல் கடிதம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய கூடாது; மத்திய மந்திரி அத்வாலே கண்டனம்
x
தினத்தந்தி 12 Jun 2018 12:47 PM GMT (Updated: 12 Jun 2018 12:47 PM GMT)

பிரதமர் மோடிக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் மிரட்டல் கடிதம் பற்றிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதற்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜல்னா,

மகாராஷ்டிராவின் புனே அருகே கோரேகாவன் பகுதியில் கடந்த ஜனவரியில் வன்முறை ஏற்பட்டது.  இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.  அதில், ராஜீவ் காந்தியை கொன்றது போன்று பிரதமர் மோடியை கொல்ல திட்டம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தின் உண்மை தன்மை பற்றி தேசியவாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பினார்.  அச்சுறுத்தல் கடிதத்தினை வைத்து லாபம்  பெறுவதற்காக பாரதீய ஜனதா கட்சி விளையாடி வருகிறது என அவர் கூறினார்.

இதேபோன்று அச்சுறுத்தல் கடிதத்தின் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என கூறினார்.  பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கடிதத்தின் நம்பக தன்மை மீது கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்வதற்கு பல விவகாரங்கள் உள்ளன.  தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் விளையாட்டில் ஈடுபட கூடாது என அவர் கூறியுள்ளார்.

இந்த வன்முறையில் ஒருவர் பலியானார்.  ஒரு வழக்கறிஞர் மற்றும் ஒரு பெண் பேராசிரியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் கைது செய்யப்பட்டது நியாயம் என கூறியுள்ள அத்வாலே, நக்சலைட்டு இயக்கத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிய போதிய சான்றுகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

Next Story