வங்கி மோசடிகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்


வங்கி மோசடிகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை பாராளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2018 1:02 PM GMT (Updated: 12 Jun 2018 1:02 PM GMT)

எதிர்காலத்தில் வங்கி மோசடிகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்து உள்ளார். #RBI #ParliamentaryPanel

புதுடெல்லி,

பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆஜரான ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கி கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என உறுதியளித்தார். 

வங்கி மோசடி உள்ளிட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, பாராளுமன்ற நிலைக்குழு (நிதி) அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி உர்ஜித் படேல் பாராளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது வராக்கடன், வங்கி மோசடிகள்,  பணத் தட்டுப்பாடு மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக அவரிடம் நிலைக்குழு கடினமான கேள்விகளை எழுப்பியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரப்ப மொய்லி சமீபத்தில் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாமல் சென்றது, வங்கி மோசடிகளை எதிர்க்கொள்வதில் கடினமான நடவடிக்கையை எடுக்காதது தொடர்பாக வேள்வியை எழுப்பினார்.  

அதற்கு வங்கி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வங்கி மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உர்ஜித் படேல் தெரிவித்தார். இதேபோல், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிக்கு திரும்பி வந்த செல்லாத நோட்டுகள் எவ்வளவு? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்டனர்.

இதற்கு முன்பு நாடாளுமன்ற நிலைக்குழு (நிதி) முன்பு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஆஜரான போது, ஆட்கள் பற்றாக்குறை காரணமாக செல்லாத நோட்டுகளை மதிப்பிட புதிய நோட்டு எண்ணும் எந்திரங்களை வாங்க உத்தரவிட்டு உள்ளதாகவும், அந்த எந்திரம் விரைவாக நோட்டுகளை எண்ணுவதுடன், கள்ள நோட்டுகளையும் கண்டுபிடித்து விடும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story