‘கொரிய தீபகற்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்’ டொனால்டு டிரம்ப் - கிம் சந்திப்பிற்கு இந்தியா வரவேற்பு


‘கொரிய தீபகற்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்’ டொனால்டு டிரம்ப் - கிம் சந்திப்பிற்கு இந்தியா வரவேற்பு
x

டொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பை வரவேற்று உள்ள இந்தியா ‘கொரிய தீபகற்பத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்’ என கூறியுள்ளது. #TrumpKimsummit

புதுடெல்லி,  

அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலம் கனிந்து இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன் என கூறியுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள நிலையில், இந்தியாவும் வரவேற்று உள்ளது.

‘‘சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் வடகொரியா உச்சி மாநாட்டை வரவேற்கிறோம். இது ஒரு சாதகமான முன்னேற்றம். கொரிய தீபகற்பத்தில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்யவழியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துகிற எல்லா முயற்சிகளையும் இந்தியா எப்போதும் ஆதரித்து வந்து உள்ளது’’ என இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புகிறோம் என குறிப்பிட்டு உள்ள வெளியுறவுத்துறை, இதன்மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட வழி பிறக்கும் எனவும் தெரிவித்து உள்ளது.

Next Story