தேசிய செய்திகள்

வாஜ்பாய்–மோடி ஒப்பீடு: அரசியலில் ஒருவருக்கு யார் இணை என்பதை வைகோ முடிவு செய்ய முடியாது + "||" + Vaiko, who can not decide whether to connect to someone in politics

வாஜ்பாய்–மோடி ஒப்பீடு: அரசியலில் ஒருவருக்கு யார் இணை என்பதை வைகோ முடிவு செய்ய முடியாது

வாஜ்பாய்–மோடி ஒப்பீடு: அரசியலில் ஒருவருக்கு யார் இணை என்பதை வைகோ முடிவு செய்ய முடியாது
அரசியலில் ஒருவருக்கு யார் இணை என்பதை வைகோ போன்றவர்களால் முடிவு செய்ய முடியாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பார்க்க, தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி வந்திருந்தார். அவருடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகனும் சென்றார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–

வாஜ்பாய் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த நான் அவரை சந்தித்த பிறகு தான் 1999–ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தேன். அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் மிகுந்த மன வருத்தத்தை தந்தது. வாஜ்பாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவருடைய குடும்பத்தினர், மூத்த தலைவர் விஜய் கோயல் மற்றும் உதவியாளரிடம் விசாரித்தோம். கவலைப்படும்படி ஒன்றும் இல்லை என்று தெரிவித்தனர்.

அமித்ஷா அடுத்த மாதம் 9–ந் தேதி தமிழ்நாட்டுக்கு வர இருக்கிறார். அவரது வருகை அரசியல் ரீதியானது அல்ல. கட்சியின் அமைப்பு ரீதியானது. தொண்டர்கள், நிர்வாகிகள், நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சந்திப்பு ஆகியவை திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த சந்திப்பில் அந்தமான், புதுச்சேரி பொறுப்பாளர்களும் கலந்துகொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தியும், தேர்தலில் வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்தவும் வழிகாட்ட அமித்ஷா வருகிறார். கூட்டணி குறித்தோ, முக்கிய நபர்களை சந்திப்பது குறித்தோ தற்போதைய பயணத்தில் திட்டம் இல்லை.

தொலைக்காட்சி விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் ஊடகத்தின் மீது வழக்கு தவிர்க்கப்பட்டு இருக்கலாம். தலைவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து வாஜ்பாய், மோடி ஆகியோரை ஒப்பிட்டு வைகோ பேசியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘அரசியலில் இவருக்கு இணை இவர் என்று யாரையும் சொல்ல முடியாது. இதை வைகோ போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டை உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உயர்த்திக்கொண்டு இருக்கிறார். வாஜ்பாயும், மோடியும் இந்தியாவை ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆள முடியும் என்ற நிலையை மாற்றியவர்கள்’ என்றார்.