காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் பலி மேலும் 12 பேர் படுகாயம்


காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் பலி மேலும் 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:15 PM GMT (Updated: 12 Jun 2018 8:53 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

புனித ரமலான் மாதத்தையொட்டி காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைத்துள்ள நிலையிலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காஷ்மீரில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ளூர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். புல்வாமா நகரின் நியூகோர்ட்டு வளாகத்தில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறப்பு தொழுகை நடந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். பின்னர் போலீசாரின் ஆயுதங்களை கொள்ளையடித்த பயங்கரவாதிகள் அடர்ந்த இருளை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதேபோல் அனந்த் நாக் நகரில் உள்ள ஜங்கிலாத் பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து வந்த மத்திய ரிசர்வ் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிடுவதற்குள் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

அனந்த் நாக் மாவட்டத்தின் வாரிநாக் என்னும் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை பாதுகாப்பு படையினர் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பிந்து சர்மா என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். எனினும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.


Next Story