டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: வாஜ்பாய் உடல்நிலை தேறுகிறது


டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி: வாஜ்பாய் உடல்நிலை தேறுகிறது
x
தினத்தந்தி 13 Jun 2018 10:30 PM GMT (Updated: 13 Jun 2018 9:56 PM GMT)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (வயது 93) வழக்கமான உடல் பரிசோதனைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கடந்த 11–ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

வாஜ்பாய்க்கு சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கினர். மருந்துகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அவரது உடல் நிலை தேறி வருகிறது.

இதுபற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘அவரது சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருந்தது. மெதுவாக டயாலிசிஸ் செய்யப்பட்டது.

சிகிச்சை பலன் அளித்து, கடந்த 48 மணி நேரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது. அவரது சிறுநீரக செயல்பாடு இயல்பு நிலையில் உள்ளது. சிறுநீர் வெளியேற்ற அளவும் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்து விட்டது. தொற்றும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ரத்த அழுத்தம், சுவாச செயல்பாடுகள், இதயத்துடிப்பு எல்லாமே இயல்பாக உள்ளது. அடுத்த சில நாட்களில் அவர் பூரண சுகம் பெற்று விடுவார்’’ என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.


Next Story