தேசிய மனித உரிமை ஆணையத்திடம், கனிமொழி எம்.பி. மனு


தேசிய மனித உரிமை ஆணையத்திடம், கனிமொழி எம்.பி. மனு
x
தினத்தந்தி 13 Jun 2018 11:15 PM GMT (Updated: 13 Jun 2018 10:05 PM GMT)

தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக உளவுத்துறையின் தோல்விக்கு உதாரணம் என்றும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100–வது நாளான கடந்த மே 22–ந்தேதி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது, போலீசார் நடத்திய கண் மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தூத்துக்குடி போராட்டம் குறித்து தகவலை சேகரிக்க முடியாததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தவேண்டும்.

மே 22–ந்தேதி மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற போவதை தெரிந்து இருந்தும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை ஏனோ தானோ என்று போக்கில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கவேண்டும்.

போலீசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி, கொலை செய்ய முயன்றதால், போலீஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு போலீசாரும் கொடூர காயம் அடையவில்லை. போலீசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, 9 சிறப்பு தாசில்தாரர்கள், துணை தாசில்தாரர்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்து, சப்–கலெக்டர் கடந்த மே 21–ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தாசில்தார் எந்த இடத்தில் பணி செய்யவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

துணைதாசில்தார் சேகர், திரேஸ்புரம், பனிமய மாதா தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பணி செய்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

அதேபோல, மாத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் கண்ணன், 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திரேஸ்புரம் சந்திப்பில் துப்பாக்கி சூடு நடத்தவும், எஸ்.ஏ.வி. மைதானத்தில் பணியில் இருந்த மண்டல வரித்துறை அதிகாரி சந்திரன், அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்ட விரோதமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

மே 22–ந்தேதி நடந்த கலவரத்தின்போது, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்துள்ளார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் வாய்மொழியாக பெற்ற உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. எனவே, மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கனிமொழி கூறியுள்ளார்.


Next Story