ஜார்க்கண்ட்டில் மாடு திருடர்கள் என இரு இஸ்லாமியர்கள் அடித்துக்கொலை, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


ஜார்க்கண்ட்டில் மாடு திருடர்கள் என இரு இஸ்லாமியர்கள் அடித்துக்கொலை, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 4:51 AM GMT (Updated: 14 Jun 2018 4:51 AM GMT)

ஜார்க்கண்டில் மாடு திருடர்கள் என இரு இஸ்லாமியர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Jharkhand

ராஞ்சி,

கவுடா மாவட்டத்தில் எருமை மாடுகளை திருடியதாக குற்றம்சாட்டி இரு இஸ்லாமியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் எருமைகளை கடத்தியதாகவும் அவர்களை கிராம மக்கள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
தாலு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஷிராபுதீன் அன்சாரி (வயது 35) மற்றும் முர்தாஸா அன்சாரியை (வயது 30) கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். அவர்கள் 13 எருமை மாடுகளை திருடியதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. கவுடா மாவட்ட எஸ்.பி. ராஜீவ் குமார் சிங் பேசுகையில், கிராம மக்கள் காணாமல் போன எருமைகளை அடித்துக்கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பகுதியில் கண்டுபிடித்ததாக குறிப்பிட்டு உள்ளனர் என கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் 4 பேரை கைது செய்து உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதா ஆட்சி செய்யும் ஜார்க்கண்டில் கடந்த வருடம் இஸ்லாமிய கால்நடை வியாபாரிகள் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் சமீபத்தில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது.

Next Story