தேசிய செய்திகள்

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு + "||" + Following the kovai Rs.2000 and Rs.500 counterfeit printing in Marathi

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தாரா,

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் கேத்தேஷ்வரா கோவில் அருகே நேற்று முன்தினம் 2 பேர் ரூ.2000 மற்றும் ரூ.500 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தனர். இதனைக் கண்டறிந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் வைத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.


இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்களது கூட்டாளிகள் உதவியுடன் சத்தாராவின் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வந்ததாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.29 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாக போலீசார் கைப்பற்றினர். இது தவிர ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான ஒரு பக்கம் மட்டும் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளையும் கைப்பற்றினர். இவை அனைத்தும் ரூ.2000 மற்றும் ரூ. 500 கள்ள நோட்டுகள் ஆகும்.

சோதனையின் போது கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலுக்கு பயங்கரவாத அமைப்புகள் ஏதேனுடன் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் கோவையில் அச்சடிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூ.2000 கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின.

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறையில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இவை நவீன தொழில் நுட்பத்தில் இருப்பதால், இதைபோன்று கள்ள நோட்டுகளை அச்சடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ச்சியாக கள்ள ரூபாய் நோட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருவது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.