தேசிய செய்திகள்

காஷ்மீரில் மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு ஐ.நா. சபையின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது + "||" + India rejected the UN Council report

காஷ்மீரில் மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு ஐ.நா. சபையின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது

காஷ்மீரில் மனித உரிமை மீறல் என குற்றச்சாட்டு ஐ.நா. சபையின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது
காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை இந்தியா முற்றிலும் நிராகரித்ததுடன், இது தொடர்பாக கடும் கண்டனமும் பதிவு செய்தது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளின் மனித உரிமை நிலவரம் குறித்த 49 பக்க அறிக்கையை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் நேற்று வெளியிட்டது. ஐ.நா. சார்பில் முதல்–முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

அதாவது, ‘இந்திய மாநிலமான காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை கண்டும் காணாமல் இருத்தல், இது தொடர்பான சட்டக்குறைபாடுகள் போன்றவை மனித உரிமைக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம், காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் போன்ற சிறப்பு சட்டங்கள், வழக்கமான சட்ட நடைமுறைகளை பாதிக்கின்றன’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த 2016–ம் ஆண்டு முதல் காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை விரிவாக விளக்கியுள்ள ஐ.நா. ஆணையம், இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து விரிவான, பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

மேலும், 2016 முதல் நடந்த பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட படுகாயங்கள் குறித்தும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு இந்தியாவையும் கேட்டுக்கொண்டு இருந்தது.

இதைப்போல பாகிஸ்தானின் நிர்வாகத்தில் இருக்கும் (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பகுதியில் சர்வதேச மனித உரிமை சட்டங்களை முழுவதுமாக கடைப்பிடிக்குமாறு அந்த நாட்டை அறிவுறுத்தியுள்ள ஐ.நா. கவுன்சில், அங்கு அமைதிப்பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் பொது ஆர்வலர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்துமாறும் வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா.வின் இந்த அறிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீர் மற்றும் கில்ஜித்–பல்சிஸ்தான்’ என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள இந்தியா, அப்படி எந்த நிறுவனங்களும் இல்லை என அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

காஷ்மீர் குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. அது தவறானது, ஒருதலைப்பட்சமானது மற்றும் தூண்டப்பட்டது. இப்படி ஒரு அறிக்கை வெளியிட வேண்டியதன் நோக்கம் என்ன? ஐ.நா. நிறுவனத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையிலான இத்தகைய தனிப்பட்ட பாரபட்சத்தை அனுமதிப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் ஒரு பகுதியை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாகவும், சட்ட விரோதமாகவும் ஆக்கிரமித்து இருக்கிறது.

இந்த அறிக்கை, முற்றிலும் சரிபார்க்கப்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இந்திய பிராந்தியம் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்த விளக்கங்கள் அனைத்தும் தவறானவை, தவறாக வழிநடத்துபவை. அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பயங்கரவாதம்தான் மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும். ஆனால் பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் இந்த பயங்கரவாதத்தை, இந்த அறிக்கை தயாரித்தவர்கள் வசதியாக மறந்து விட்டனர். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் காஷ்மீர் உள்பட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் வழங்குவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை இந்த அறிக்கை வேண்டுமென்றே புறந்தள்ளி இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - 2 ராணுவ வீரர்கள் பலி, 2 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
2. காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா
காஷ்மீரில் நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் ராஜினாமா செய்துள்ளார்.
3. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவை ஒப்புதல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜனதா இணைந்து ஆட்சியமைத்து இருந்தது. இந்த கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகியதால் கடந்த ஜூன் மாதம் முதல்–மந்திரி மெகபூபா முப்தி பதவி விலகினார்.
4. ஜம்மு காஷ்மீர்: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி, 34 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் பலியானார்.
5. ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் -இரண்டு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.