தேசிய செய்திகள்

ராணுவ அதிகாரி மனைவி கொலையில் மற்றொரு ராணுவ அதிகாரி கைது + "||" + The military officer wife was murdered Another army officer arrested

ராணுவ அதிகாரி மனைவி கொலையில் மற்றொரு ராணுவ அதிகாரி கைது

ராணுவ அதிகாரி மனைவி கொலையில் மற்றொரு ராணுவ அதிகாரி கைது
டெல்லியில் ராணுவ அதிகாரி மனைவி கொலை வழக்கில் மற்றொரு ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி. இவருடைய மனைவி சைலஜா திவிவேதி (வயது 35). கடந்த சனிக்கிழமை காலை சைலஜா, ‘பிசியோதெரபி’ சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கணவருடைய காரில் சென்றார்.


கார் டிரைவர், சைலஜாவை மருத்துவமனையில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் சில மணி நேரத்துக்கு பிறகு அவரை அழைத்துவருவதற்காக டிரைவர் காரை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது மருத்துவமனையில் இருந்தவர்கள் சைலஜா மருத்துவமனைக்குள் வரவில்லை என்று கூறிவிட்டனர். இதனால் குழப்பம் அடைந்த டிரைவர் உடனடியாக வீட்டுக்கு சென்று அமித் திவிவேதியிடம் நடந்ததை எடுத்துக்கூறினார்.

இதையடுத்து அமித் திவிவேதி, மனைவியை தேடி சென்றார். இதற்கிடையே டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பெண் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணமாக கிடந்தது தெரிந்தது. போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மர்ம நபர் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அவருடைய முகத்தில் காரை ஏற்றி சிதைத்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால் அமித் திவிவேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை அமித் திவிவேதியிடம் காட்டி விசாரித்தனர்.

அப்போதுதான் கொலை செய்யப்பட்டது ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆள் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் அமித் திவிவேதியின் நண்பரான மற்றொரு ராணுவ அதிகாரிக்கு சைலஜா கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அவரை தேடியபோது அவர் செல்போனை அணைத்துவிட்டு, தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பதுங்கி இருந்த அந்த ராணுவ அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். சைலஜா கொலை தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.