தெலுங்கானாவில் கடத்தப்பட்டு கர்நாடக மருத்துவமனையில் கிடந்த பிறந்து 6 நாளேயான பெண் குழந்தை மீட்பு


தெலுங்கானாவில் கடத்தப்பட்டு கர்நாடக மருத்துவமனையில் கிடந்த பிறந்து 6 நாளேயான பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 3 July 2018 3:26 PM GMT (Updated: 3 July 2018 3:26 PM GMT)

தெலுங்கானாவில் பெண் ஒருவரால் கடத்தப்பட்ட பிறந்து 6 நாளேயான பெண் குழந்தை கர்நாடகாவிலுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டது.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்கு, பிறந்து 6 நாளே ஆன தங்களது பெண் குழந்தையுடன் தடுப்பு ஊசி போடுவதற்காக பெற்றோர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், குழந்தையின் தாயிடம் அறிமுகம் செய்து கொண்ட பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டு கொண்டு வருகிறேன் என கூறி குழந்தையை பெற்று சென்றுள்ளார்.  அதன்பின் அவர் திரும்பி வரவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் குழந்தையுடன் பெண் மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.  மற்றொரு காட்சியில் கர்நாடகாவில் உள்ள பிதார் நகருக்கு செல்லும் பேருந்தில் அந்த பெண் ஏறுவது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், பிதார் நகரில் அரசு மருத்துவமனை ஒன்றில் அந்த குழந்தை கேட்க ஆளின்றி தனியாக இன்று கிடந்துள்ளது.  இதனை தொடர்ந்து போலீசார் குழந்தையை மீட்டு ஐதராபாத்தில் உள்ள அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றுள்ளனர்.  குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story