நேபாளம்: கைலாஷ் புனித யாத்திரை சென்று சிக்கியவர்களில் மேலும் 96 பேர் மீட்பு


நேபாளம்: கைலாஷ் புனித யாத்திரை சென்று சிக்கியவர்களில் மேலும் 96 பேர் மீட்பு
x
தினத்தந்தி 4 July 2018 3:34 AM GMT (Updated: 4 July 2018 3:34 AM GMT)

நேபாளத்தில் கைலாஷ் புனித யாத்திரை சென்று சிக்கியவர்களில் மேலும் 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். #Nepal

காத்மாண்டு,

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாய மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட ஏராளமான பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக மானசரோவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். மானசரோவர் அமைந்துள்ள திபெத்திய பகுதியிலும், அங்கு செல்வதற்கான நேபாள நாட்டின் மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக மானசரோவருக்கு சென்ற இந்திய பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேபாள நாட்டின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சா என்னும் இடத்தில் 550 பேரும், திபெத்திய பகுதியில் 500 பக்தர்களும் என 1,500-க்கும் மேற்பட்டோர் மோசமான வானிலை காரணமாக தாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள இந்திய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.இதுதொடர்பாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று நேபாள அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்திய பக்தர்களை மீட்பதற்கு ராணுவ ஹெலிகாப்டர்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், மானசரோவருக்கு யாத்திரை மேற்கொண்டவர்களை பத்திரமாக மீட்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டார்.

சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர் கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள சுர்கெட் பகுதியில் சிக்கியிருந்த 96 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 


Next Story