திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 6 July 2018 11:30 PM GMT (Updated: 6 July 2018 9:33 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு 16-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

திருப்பதி, 

அனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தனர். பிரம்மோற்சவ நாட்களில் அவர்கள் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் அருகில் தனி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Next Story