சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னும் மோதல்: டெல்லி அரசுக்கு பணியாளர் கட்டுப்பாட்டை வழங்க கவர்னர் மறுப்பு


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னும் மோதல்: டெல்லி அரசுக்கு பணியாளர் கட்டுப்பாட்டை வழங்க கவர்னர் மறுப்பு
x
தினத்தந்தி 6 July 2018 10:11 PM GMT (Updated: 6 July 2018 10:12 PM GMT)

டெல்லி அரசுக்கு பணியாளர்கள் கட்டுப்பாட்டினை தர கவர்னர் மறுப்பது, அராஜகத்துக்கு வழிநடத்தும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆட்சி அதிகாரம் துணை நிலை கவர்னருக்கா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மந்திரிசபைக்கா என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, டெல்லி துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது, அவர் மந்திரிசபை அறிவுரைபடிதான் செயல்பட முடியும் என 4-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

மேலும், நிலம், போலீஸ், பொது ஒழுங்கு ஆகிய 3 துறைகள் தவிர்த்து, பிற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்கிற அதிகாரம் டெல்லி அரசுக்குத்தான் இருக்கிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பின்னரும் டெல்லி அரசுக்கும், துணைநிலை கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து, பணியாளர்கள் நியமனம், இட மாற்றத்தில் முதல்-மந்திரி ஒப்புதல் வழங்கும் புதிய நடைமுறையை டெல்லி அரசு கொண்டு வந்து உள்ளது.

ஆனால் 2015-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவு, அதிகாரிகள் நியமனம், மாற்றத்துக்கான அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி பணியாளர் துறை, டெல்லி அரசு கொண்டு வந்து உள்ள நடைமுறையை ஏற்க மறுக்கிறது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2015-ம் ஆண்டு உத்தரவு அமலில் இல்லாமல் போய்விட்டது என்று கெஜ்ரிவால் கூறுகிறார்.

இந்த நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று 25 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்திடம் துணை நிலை கவர்னர் அறிவுரை கேட்டு, டெல்லி அரசுக்கு பணியாளர் நலத்துறை கட்டுப்பாடு வழங்கப்படாது என தெரிவித்து உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மத்திய அரசு பகிரங்கமாக மறுத்து இருப்பது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. துணைநிலை கவர்னரின் மறுப்பு, நாட்டில் அராஜகத்துக்கு வழிநடத்தும்.

போலீஸ், நிலம், பொது ஒழுங்கு ஆகிய 3 துறை தவிர்த்து பிற அனைத்து துறை மீதான நிர்வாக அதிகாரங்கள் டெல்லி அரசுக்குத்தான் உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

பணியாளர் துறை கட்டுப்பாட்டை டெல்லி அரசுக்கு தர வேண்டும் என்பதை துணை நிலை கவர்னர் ஏற்க மறுக்கிறார்.

அரசை முடங்கச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி இது.

துணை நிலை கவர்னரின் மறுப்பு, சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பா என்பது குறித்து நாங்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறோம். எல்லா வாய்ப்புகளையும் ஆராய்கிறோம். எதையும் விட்டு விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story