வடமேற்கு வங்கக் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு 5 மாநிலங்களில் மழை


வடமேற்கு வங்கக் கடற்பகுதியில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு 5 மாநிலங்களில் மழை
x
தினத்தந்தி 7 July 2018 9:27 AM GMT (Updated: 7 July 2018 9:27 AM GMT)

வடமேற்கு வங்கக் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதால் 5 மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி

தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. அந்தமான் பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் கடந்த மே மாதம் மூன்றாம் வாரத்தில் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 29-ஆம் தேதி வழக்கத்தை விட முன்னதாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து சில தினங்களில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. தமிழகத்தில் உதகை, கோவை, தேனி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஜூன் இரண்டாம் வாரம் முதல் பரவலாக கன மழை பெய்தது.

தமிழகத்திற்கு முக்கிய நீர் ஆதாரத்தை தரும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்கிய சில நாட்களிலேயே, கர்நாடகாவில் மிக பலத்த மழையை கொடுத்ததால் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனை அடுத்து கபினியில் இருந்து தமிழகத்திற்கு  உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த ஆண்டு 96 சதவிகிதம் முதல் 104 சதவிகிதம் வரை தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்று  ஏற்கனவே  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதனிடையே கடந்த 10 தினங்களாக பருவமழையின் தாக்கம் குறைந்து காணப்பட்டநிலையில் வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கதேச கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மீண்டும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் கூறுகையில் வங்க கடலில் வடமேற்கு பகுதிகளில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 முதல் 4 நாட்களில் சத்தீஸ்கர், மத்திய இந்திய பகுதிகள், வடக்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். மத்திய அரபிக் கடலில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் அலைகளின் உயரம் எழும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கோவாவில் கடந்த வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. பனாஜியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story