நெற்றியில் சந்தன பொட்டு விவகாரம்: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மாணவியின் தந்தை விளக்கம்


நெற்றியில் சந்தன பொட்டு விவகாரம்: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மாணவியின் தந்தை விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2018 6:58 AM GMT (Updated: 9 July 2018 6:58 AM GMT)

கேரளாவில் சந்தன பொட்டு வைத்த காரணத்திற்காக மாணவி ஒருவர் மதராசா பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பலத்த சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவைச் சேர்ந்தவர் உம்மர். இவரது மகள் ஹீனா. மாணவியான இவர் குறும்படம் ஒன்றில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்துள்ளார். இதனை அறிந்த மதராசா உடனடியாக அவரை அதிலிருந்து வெளியேற்றியுள்ளது. இதுதொடர்பாக அவரின் தந்தை உம்மர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

அதில்,  என் மகள் எப்போதுமே பள்ளி மற்றும் மதராசாவில் முதல் இடத்தை பெறுபவள். கல்வி அறிவோடு மட்டுமில்லாமல் பாடல், நடிப்பு என அனைத்திலும் சிறப்பானவள். மாவட்ட ரீதியான பல போட்டிகளில் தன் திறமைகளை கச்சிதமாக வெளிப்படுத்தியவள். மதராசா சார்பில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் 5-வது இடம் வந்து சாதனை படைத்தார். இருப்பினும் தற்போது அவர் மதராசாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம் குறும்படம் ஒன்றில் நடிப்பதற்காக என் மகள் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தார். இதனால் அவரை மதராசாவில் இருந்து நீக்கியுள்ளனர். நல்லவேளை.. கல்லெறிந்து கொல்லப்படும் அளவிற்கு என் மகளுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். தனது மகள் நெற்றியில் பொட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்தே அவர் இந்தப் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மதராசாவிற்கு எதிராக துணிந்து நின்றதாக பலரும் உம்மருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலரோ இஸ்லாம் மதத்தை கெடுக்கும் நடவடிக்கை என விமர்சித்தனர். இதனிடையே உம்மர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இஸ்லாமை தான் தொடர்ந்து நம்புவதாகவும், அதனையே பின் தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அதில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களே, இது ஒரு உலகப் பிரச்சனை அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளை பயன்படுத்தி மதத்தை களங்கப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இது ஒரு தனிப்பட்ட பிரச்சினை. நீங்கள் சொல்வதுபோல், என்னுடைய மதத்திற்கு நான் எதிரானவன் அல்ல. நான் அதனை 100 சதவீதம் இன்னும் நம்புகிறேன். அதற்கு ஆதரவும் மரியாதையும் தருவேன். நான் மனிதனை நேசிக்கிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்களே..? முதலில் பிரச்சனை என்ன..? உண்மை என்ன? என தெரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா..? அதுதொடர்பாக ஒரு மெசேஜ் மூலமாக கூட என்னிடம் பேசினீர்களா..? அதன்பின் என்னை வைத்து ட்ரோல் செய்து வீடியோ செய்யலாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Next Story