துலே கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற விசாரணை - அரசு அறிவிப்பு


துலே கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற விசாரணை - அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2018 12:09 PM GMT (Updated: 9 July 2018 12:09 PM GMT)

துலே கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.


நாக்பூர்,


 இந்தியாவின் பிற மாநிலங்களை போன்று மராட்டியத்திலும் குழந்தை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. துலே மாவட்டம் ரெயின்படா கிராமத்தில் ஞாயிறு அன்று வாரச்சந்தை நடைபெற்ற போது அங்கு வந்த சிலரை குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்த கிராம மக்கள், 5 பேரை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். அவர்கள் வாரச்சந்தை நடைபெறுவதால் யாசகம் கேட்கவே அங்கு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் உள்பட 20-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே குடிபோதையில் இருந்தவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிரியாவில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக வெளியான வீடியோவே அவர்கள் அடித்துக் கொலை செய்யப்படுவதற்கு காரணம் என்று தெரியவந்தது. இந்நிலையில் கும்பல் தாக்குதல் தொடர்பாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளார். 

Next Story