நவாஸ் ஷெரீப், மரியம் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள் - பாகிஸ்தான்


நவாஸ் ஷெரீப், மரியம் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள் - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 9 July 2018 1:16 PM GMT (Updated: 9 July 2018 1:16 PM GMT)

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நவாஸ் ஷெரீப், மரியம் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு சட்ட மந்திரி கூறியுள்ளார்.

 இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்து குவித்து இருப்பதை ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்டது. இதனால் பதவி இழந்த நவாஸ் மற்றும் குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் லண்டனில் உள்ள அவென்பீல்டு குடியிருப்பு தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகளும், மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் சப்தருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த 6–ந் தேதி தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

லண்டனில் இருக்கும் நவாசும், மரியமும் 13–ந் தேதி நாடு திரும்ப உள்ளனர். இதை அவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயாராக இருப்பதாக தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு அறிவித்தது. எனவே லாகூரில் அவர்கள் தரையிறங்கியதும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. பாகிஸ்தான் சட்ட மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி அலி ஷபார் பேசுகையில், கோர்ட்டு உத்தரவை அரசு நிறைவேற்றும் என்று கூறியுள்ளார். 

நவாஸ் ஷெரீப் மற்றும் மரியத்தை விமான நிலையத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பாகிஸ்தான் திரும்பும் முன்னதாக ஜாமீன் பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story