இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து


இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து
x
தினத்தந்தி 10 July 2018 10:02 AM GMT (Updated: 10 July 2018 10:02 AM GMT)

இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டது சர்ச்சையாகிய நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #InstituteofEminence

புதுடெல்லி,

உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 3 அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 3 தனியார் பல்கலைக்கழகங்களும் உலகத்தர பல்கலைக்கழகங்களுக்கு அதற்கான சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இதில் இன்னும் தொடங்கப்படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பல்கலைக்கழகத்துக்கும் இந்தத் தகுதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளின்படி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் 10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை இத்திட்டத்திற்கு தேர்வு செய்யும். இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். “இத்தகைய நிறுவனங்கள் மொத்தத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி செயல்படும்.” பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய கோபாலசாமி தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது.

 74 அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் 40 தனியார் கல்வி நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர். பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் பல்கலை.களையும் மட்டும் குழு முதற்கட்டமாக தேர்வு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 5 நிறுவனங்களின் தகுதி குறித்து எந்த ஐயமும் இல்லை.

 ஆறாவதாக இடம் பெற்றுள்ள இன்னும் தொடங்கப்பட்டாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு எந்த அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்யப்படும் அரசு பல்கலைக்கழகங்களுக்கு 5 வருடங்கள் ரூ. 1000 கோடி வழங்கும். ஆனால் தனியார் நிறுவனங்கள் அரசிடம் நிதிபெற தகுதி கிடையாது. கமிட்டியிடம் ஜியோ இன்ஸ்டிட்யூட் செய்துள்ள விண்ணப்பத்தில், ரூ. 9,500 கோடி ரூபாய் பயன்படுத்துகிறது. புனேயில் பல்கலைக்கழகம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியதுமே சமூக வலைதளங்களில் ஜியோ கல்வி நிறுவனம் வைரலாகியது. பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினர். “இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படுள்ளது. இதுபோன்ற அந்தஸ்து என்ன அடிப்படிப்படையில் வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்கவேண்டியது அவசியமானது,”என காங்கிரஸ் கூறியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானிக்கு சாதமாக பா.ஜனதா அரசு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.  

ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆயிஷா கித்வய் பேசுகையில், “ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இன்னும் வளாகம் கூட கிடையாது, இணையதளம் அல்லது முன்னாள் மாணவர்கள் கிடையாது மற்றும் முக்கிய ஐஐடிகள் மற்றும் அசோக் பல்கலைக்கழகம் மற்றும் ஒபி ஜிண்டால் குளோப் பல்கலைக்கழகங்களை பின்னுக்கு தள்ளி முன்னே வந்துள்ளது. இனிதான் தொடங்கப்பட வேண்டும், ஆனால் உலகத்தரம் வாய்ந்த என்ற பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. இதனால் நோக்கத்தில் முரண்பாடு உள்ளது தெரியவில்லையா? என கேள்வியை எழுப்புகிறார்.

 இதுபோன்று பல்கலைக்கழக பேராசியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், டுவிட்டர்வாசிகள் மத்திய அரசின் நகர்வை விமர்சனம் செய்து கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் மத்திய அரசு இதற்கு விளக்கமளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தற்போது புதிதாக தொடங்கப்பட உள்ள கல்வி நிறுவனங்கள் என கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் அரசின் நகர்வு தொடர்பாக டுவிட்டரில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.

Next Story