தேசிய செய்திகள்

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை + "||" + Mumbai rains live updates NDRF team reaches spot to help stranded train passengers

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை

4-வது நாளாக கனமழை; ரெயில், சாலை போக்குவரத்து பாதித்து மும்பை ஸ்தம்பித்தது; உஷார் நிலையில் கடற்படை
கனமழையால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஸ்தம்பித்துள்ளது. தெருக்கள், சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #MumbaiRains
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து இன்று 4-வது நாளாக மழை நீடிக்கிறது.  இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். சுற்றுப்புற மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரெயில்கள் சேவை நிறுத்தம் 

கனமழை காரணமாக ரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரெயில்வே எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் ரத்து செய்துள்ளது. மழை காரணமாக ரெயில்கள் குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று சிக்கும் ரெயில்களில் உள்ள பயணிகளுக்கு உதவி செய்து வருகிறது ரெயில்வே. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவையை வழங்கி வருகிறது. “ரெயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விராருக்கு அப்பால் உள்ள நிலையங்களில் நெருக்கமான கண்காணிப்பு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பயணிகளுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விமானங்களின் சேவையிலும் பாதிப்பு நேரிட்டது. 

தேசிய பேரிடர் மீட்புக் குழு

இதற்கிடையே வைசாய் மற்றும் விரார் ரெயில்நிலையங்கள் இடையில் சிக்கிய இரு ரெயில்களில் இருக்கும் பயணிகளுக்கு உதவ தேசிய பேரிடர் மீட்புக் குழுவை ரெயில்வே நாடியது. ரெயில் எண்கள் 12009 மற்றும் 12928 உள்ள பயணிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் ரெயில் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது.  பயணிகளை சாலை வழியாக அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே உதவிக்கு வருமாறு ரெயில்வே கோரிக்கை விடுத்தது. ரெயில்வேயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு, ரெயிலில் உள்ள பயணிகளை மீட்க அங்கு சென்றுள்ளது.

தயார் நிலையில் கடற்படை

மும்பையில் கனமழை பெய்துவரும் நிலையில் இதுவரையில் உதவிக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை, இருப்பினும் தயார் நிலையில் உள்ளோம் என கடற்படை தெரிவித்துள்ளது. எங்களுடைய மீட்பு குழு, தண்ணீரிலிருந்து மக்களை காப்பாற்றும் குழு, வான்வழியாக மீட்கும் குழு தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை

இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 24 மணி நேரங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.