காங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு


காங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2018 11:05 AM GMT (Updated: 11 July 2018 11:05 AM GMT)

காங்கிரஸ் விவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தியது, அவர்களுக்கு துரோகம் செய்தது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #Congress #Farmers

புதுடெல்லி, 

பஞ்சாப் மாநிலம் மாலோட் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு வளர்ச்சி பேரணியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். 

ஒரு குடும்பத்தின் நலனுக்கு வாக்கு வங்கியாக விவசாயிகளை பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என குற்றம் சாட்டினார். 

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறிவருகிறார். இதற்கு ஏற்ப இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் பா.ஜனதா கூறிவந்தது. பாரதீய ஜனதா ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டதைவிட, 2019 பாராளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் புதிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையினை வழங்குவதற்கு வசதியாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.9,000 கோடி வரை கடன் திட்டத்தினை அறிவித்தது. 

இந்த நிலையில் விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி செலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது. தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்நகர்வை முன்னெடுக்கிறது என்று விமர்சனமும் செய்யப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 


Next Story