திருமணத்தின் புனிதத்தை கள்ளத் தொடர்பு அழித்துவிடும் - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


திருமணத்தின் புனிதத்தை கள்ளத் தொடர்பு அழித்துவிடும் - சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 11 July 2018 9:49 PM GMT (Updated: 11 July 2018 9:49 PM GMT)

திருமணத்தின் புனிதத்தை கள்ளத் தொடர்பு அழித்துவிடும் என சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

கள்ளத்தொடர்பு கொள்ளும்போது பிடிபடும் ஆண்களுக்கு தண்டனை விதிக்க இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு வகை செய்கிறது. இதை எதிர்த்து இத்தாலி நாட்டில் வசிக்கும் இந்தியரான ஜோசப் என்பவர் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில் ‘கள்ளத்தொடர்பின்போது பிடிபடும் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை என்பது சட்டவிரோதமானது. இப்பிரச்சினையில் ஆண்-பெண் இருவருமே சமமாக கருதப்பட வேண்டும்’ என்று அவர் கூறி இருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக நேற்று தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில், “இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு திருமண பந்தத்தை பாதுகாக்கிறது. அதனை ஆதரிக்கவும் செய்கிறது. இச்சட்டம் இந்தியாவின் தனித்துவம் மிகுந்த கலாசாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது. இதை ரத்து செய்தால் கள்ளத்தொடர்பால் ஏற்படும் விளைவுகள் இந்திய திருமணங்களின் புனிதத்தை அழிப்பதாக அமைந்துவிடும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story