ஓரினச் சேர்க்கை தண்டனை சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யட்டும் - மத்திய அரசு வேண்டுகோள்


ஓரினச் சேர்க்கை தண்டனை சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யட்டும் - மத்திய அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 July 2018 9:55 PM GMT (Updated: 11 July 2018 9:55 PM GMT)

ஓரினச் சேர்க்கை தண்டனை சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யட்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

இயற்கைக்கு மாறாக உறவு கொள்வோருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் 2009-ம் ஆண்டு ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை 2013-ல் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

இருவரின் சம்மதத்துடன் நடக்கும் ஒரே பாலினத்தினரின் உறவுக்கு தண்டனை விதிப்பதை எதிர்த்தும், 377-வது சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஒரே பாலின ஈர்ப்பாளர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக மீண்டும் வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “377-வது சட்டப்பிரிவு செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்தார்.

Next Story