ராகுல்காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு - பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியதாக தகவல்


ராகுல்காந்தியுடன் இயக்குனர் பா.ரஞ்சித் சந்திப்பு - பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தியதாக தகவல்
x
தினத்தந்தி 11 July 2018 11:30 PM GMT (Updated: 11 July 2018 10:44 PM GMT)

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளன் விடுதலையாக உதவ வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி,

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் கலையரசனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு தகவல்களை அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

இதுகுறித்து ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார். அதில் “மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோரை சந்தித்தேன். அப்போது நாங்கள் அரசியல், சினிமா மற்றும் சமுதாய நிலவரங்கள் பற்றி பேசினோம். அப்போது நடந்த கலந்துரையாடல் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இதுபோன்ற எங்கள் கலந்துரையாடல் தொடரும் என எதிர்பார்க்கிறேன்” என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்கள் பா.ரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையாக உதவுவது பற்றி ராகுல்காந்தியிடம் பேசினேன். அதற்கு ராகுல்காந்தி, அவர்களின் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன் என்றும், தன் தந்தை கொலை தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் என கருதுவதாகவும் தெரிவித்தார். இவ்வாறு பா.ரஞ்சித் கூறினார்.

ராகுல்காந்தியை சந்தித்தது குறித்து பா.ரஞ்சித் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியை சந்தித்து அரசியல், சினிமா விஷயங்கள் குறித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் இருக்கும் சாதி, மத அச்சுறுத்தல்கள் குறித்தும் பேசினேன். இந்த சந்திப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆலோசனைகள் செயல் வடிவம் பெறும் என்று நம்புகிறேன். ஒரு தேசிய தலைவர் மாற்று கருத்து உள்ளவர்களுடன் ஆலோசிப்பது உற்சாகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story