வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை


வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை
x
தினத்தந்தி 12 July 2018 3:17 AM GMT (Updated: 12 July 2018 4:35 AM GMT)

அசாம் மாநிலத்தில் பார்மலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அசாம் மாநில அரசாங்கம், வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை விதித்துள்ளது. #AssamFormalinFish

கவுகாத்தி,

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து அசாமிற்கு இறக்குமதியாகும் மீன்களில் பார்மலின் எனப்படும் ஒரு வித ரசாயனம் கலந்திருப்பது அம்மாநில அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அசாம் மாநில அரசாங்கம் 10 நாட்களுக்கு ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் மீன்களின் விற்பனையை தடை செய்துள்ளது. இதனிடையே பார்மலின் கலந்த மீன்களை உண்பதால் மனிதருக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் மீன்களில் பார்மலின் பயன்படுத்தப்படுவது குறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஜூஷ் ஹஷாரிகா கூறுகையில், ”பார்மலின் கலந்த மீன்களை உண்ணும் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதால் அசாம் மாநில அரசாங்கம், இன்னும் 10 நாட்களுக்கு வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதியாகும் மீன்களுக்கு தடை விதித்துள்ளது. கவுகாத்தி மீன்கள் மார்க்கெட்டிற்கு சென்று அதிகாரிகளுடன் சோதனையிடுகையில்,  மீன்களில் பார்மலின் என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தடையை மீறி மீன்களை விற்பனை செய்வோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்” எனக் கூறினார்.

இதனிடையே பிரேதத்தை பதப்படுத்தி வைக்க உதவும் ‘பார்மலின்’ என்னும் ரசாயனம், மீன்களில் பயன்படுத்தப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story