திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி ஒப்படைத்த திருடன்


திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி ஒப்படைத்த திருடன்
x
தினத்தந்தி 13 July 2018 6:54 AM GMT (Updated: 13 July 2018 6:54 AM GMT)

கேரள மாநிலத்தில் ஆலப்புழா அருகே ஒரு வீட்டில் கொள்ளையடித்த நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருடன் ஒருவர் திருப்பி ஒப்படைத்துள்ளான். #AlappuzhaThief

ஆலப்புழா,

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற திருடன், மனம் திருந்தி தான் கொள்ளையடித்த நகைகளுடன் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி வீட்டின் வாசலிலே விட்டு வைத்து சென்றுள்ளான்.

இச்சம்பவம் குறித்து ஆலப்புழா இன்ஸ்பெக்டர் பிஜூ வி நாயர் கூறுகையில், ”திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுகுமார் என்பவர் தன் குடும்பத்தாருடன் செவ்வாய்கிழமையன்று மாலை கருவாட்டா பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பிய குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்த குமார், பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். வீட்டில் நகைகள் திருடி போயிருந்ததால் மறுநாள் காலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்” எனக் கூறினார்.

இந்நிலையில் கொள்ளைச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே வியாழனன்று காலை மதுகுமாரின் வீட்டின் முன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சுற்றி ஒரு தாளும் இருந்துள்ளது. அக்கடிதத்தில், “தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பணம் தேவைப்பட்டதனாலேயே உங்கள் நகைகளை திருடினேன். இனி இது போல் தவறு செய்ய மாட்டேன். எனக்கு எதிராக போலீசாரிடம் புகார் அளிக்காதீர்கள்” என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்ட மதுகுமார் வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனக்கேட்டு கொண்டார். 


Next Story