தேசிய செய்திகள்

ஹிமா தாஸ் ‘ஆங்கில திறன்’ பற்றிய இந்திய தடகள சம்மேளனம் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு + "||" + Athlete Hima Das does India proud, but federation tweet on her English skills has people shocked

ஹிமா தாஸ் ‘ஆங்கில திறன்’ பற்றிய இந்திய தடகள சம்மேளனம் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு

ஹிமா தாஸ் ‘ஆங்கில திறன்’ பற்றிய இந்திய தடகள சம்மேளனம் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு
இந்தியாவை பெருமைப்படுத்திய ஹிமா தாஸ் ஆங்கில திறனை குறிப்பிட்ட இந்திய தடகள சம்மேளனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. #HimaDas
புதுடெல்லி,

பின்லாந்தில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். ஹிமா தாசுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்திய தடகள சம்மேளனம் அவருடைய ஆங்கில திறனை குறிப்பிட்டு வெளியிட்ட டுவிட் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்திய தடகள சம்மேளனம் செய்துள்ள டுவிட் செய்தியில், போட்டியில் வெற்றிப்பெற்று ஹிமா தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்  “மிகவும் தெளிவாக ஆங்கில திறனுடன் பேசவில்லை, ஆனால் அவரால் முடிந்ததை கொடுத்தார். உன்னால் பெருமையடைகிறோம், இந்த அதிரடியான வெற்றியை தொடருங்கள்,”என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டுவிட்டர்வாசிகள் இந்திய தடகள சம்மேளனத்தை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். ஆங்கில திறனை குறிப்பிட்டதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

ரோகித் ராம் என்ற இளைஞர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், மைதானத்தின் தன்னுடைய திறமையை காட்டவே டம்பெர் நகரம் சென்றுள்ளாரே தவிர ஆங்கிலப் புலமையை காட்டுவதற்கு கிடையாது. உங்களுடைய கருத்து வெட்கக்கரமானது என பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள சம்மேளனம், “நீங்கள் மீண்டும் டுவிட்டர் படிக்க வேண்டும், அதனை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும், இதுபோன்ற ட்ரோலை நிறுத்த வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஹிமா தாஸ் ஆங்கில திறன்பற்றிய இந்திய தடகள சம்மேளனத்தின் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தை இதில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? விளையாட்டு வீரர்களுக்கு ஆங்கிலம் என்ன அவசியமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்கள்தானே ஏன் speking என தவறாக பதிவு செய்துள்ளனர் எனவும் பதிலடியை கொடுத்து வருகிறார்கள்.