‘விஜய் மல்லையா போல மிடுக்காக இருங்கள்’ மத்திய மந்திரி பேச்சால் பரபரப்பு


‘விஜய் மல்லையா போல மிடுக்காக இருங்கள்’ மத்திய மந்திரி பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 10:24 PM GMT)

ஐதராபாத்தில் நேற்று நடந்த தேசிய பழங்குடி இன தொழில் அதிபர்கள் மாநாட்டில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி ஜூவல் ஓரம் கலந்து கொண்டு பேசினார்.

ஐதராபாத்,

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை பாராட்டும் தொனியில் ஜூவல் ஓரம் பேசினார்.

இதுபற்றி அவர் பேசும்போது, ‘‘நாம் தொழில் அதிபர் ஆக வேண்டும். நாம் புத்திசாலி ஆக வேண்டும். நாம் மிடுக்காக வேண்டும். நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களை அறிவுறுத்தினார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, ‘‘நீங்கள் (மக்கள்) எல்லாரும் விஜய் மல்லையாவை விமர்சிக்கிறீர்கள். ஆனால் விஜய் மல்லையா என்ன செய்தார்? அவர் மிடுக்கானவர். அவர் புத்திசாலிகள் சிலரை வேலைக்கு அமர்த்தினார். அவர் இங்கேயும், அங்கேயும் வங்கிகளிடமும், அரசியல்வாதிகளிடம், அரசாங்கத்திடமும் சில காரியங்களை செய்தார். அவர் வங்கி கடன்களை வாங்கினார். உங்களை (மிடுக்கு ஆவதில் இருந்து) யார் தடுத்தார்கள்? அரசு அமைப்பில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள் என்று ஆதிவாசி மக்களை சொன்னது யார்? வங்கியாளர்களிடம் செல்வாக்கை காட்டுவதில் இருந்து உங்களை யார் தடுத்தார்கள்?’’ என கேள்விகளை அடுக்கினார்.

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story