உத்தரபிரதேசத்தில் ரூ.23 ஆயிரம் கோடி விரைவுச் சாலை


உத்தரபிரதேசத்தில் ரூ.23 ஆயிரம் கோடி விரைவுச் சாலை
x
தினத்தந்தி 15 July 2018 12:15 AM GMT (Updated: 14 July 2018 11:01 PM GMT)

உத்தரபிரதேசத்தில் ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் விரைவுச் சாலைக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் லக்னோ–சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சண்ட் சரை கிராமத்தில் இருந்து காஜிபூர் மாவட்டத்தின் ஹைதரியா கிராமம் வரை 340 கி.மீ. தொலைவுக்கு பூர்வாஞ்சல் விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அசம்காரில் நடந்தது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த விரைவுச் சாலையோரத்தில் புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சாலை செல்லும் இடமெல்லாம் நகரங்கள் வளர்ச்சி காணும். இந்த சாலை மூலம் டெல்லி–காஜிப்பூர் இடையே வேகமாக பயணிக்க முடியும். இந்த விரைவுச் சாலை சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் முத்தலாக் தடை மசோதாவை எதிர்க்கும் கட்சிகளை அவர் சாடினார். அவர் கூறும்போது, ‘கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் பரம்பரை அரசியலில் ஈடுபடும் கட்சிகள் பெண்களின் வாழ்க்கையை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுகிறது’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு ராஜா தலேப் பகுதியில் நடந்த விழாவில், ரூ.937 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அத்துடன் வாரணாசி–பல்லியா ரெயில் போக்குவரத்தையும் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் பல்வேறு அறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர், இரவில் அங்கேயே தங்கினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிர்சாபூரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பன்சாகர் நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, பின்னர் டெல்லி திரும்புகிறார்.

2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்ற பிரதமர் மோடியை முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ராம்நாயக் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.


Next Story