‘செல்பி‘ எடுத்த போது தவறி பரிதாபம், காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு


‘செல்பி‘ எடுத்த போது தவறி பரிதாபம், காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 July 2018 3:15 PM GMT (Updated: 16 July 2018 3:15 PM GMT)

‘செல்பி‘ எடுத்த போது காவிரி ஆற்றில் தவறி விழுந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரும், அவரை காப்பாற்ற முயன்ற நண்பரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.


ராமநகர், 

 
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
இதனால் இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ககனசுக்கி, பரசுக்கி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதுபோல் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா அர்க்காவதி அருகே உள்ள மேகதாதுவில் மலைமுகடுகளில் காவிரி ஆற்று நீர் பாய்ந்தோடி வருகிறது. இதை பார்க்க கடந்த சில நாட்களாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். மேலும் செல்போனில் படம் பிடித்தும் மகிழ்கிறார்கள். பீதர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் ரகுமான் (வயது 29), பவானி சங்கர் (29) அங்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். 
 
மேகதாதுவில் உள்ள ஒரு பாறை மீது ஏறி நின்று சமீர் ரகுமான் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் ரம்மியமான காட்சியுடன் தன்னை சேர்த்து செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் கால் தவறி சமீர் ரகுமான் காவிரி ஆற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த நண்பர் பவானிசங்கர் ஆற்றில் குதித்து, சமீர் ரகுமானை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் காவிரி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தில் 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். 

அவர்கள் 2 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மேகதாது காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் செல்பி புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story