மோசமான சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, சாலைகளை தகர்த்தே போராட்டம்!


மோசமான சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, சாலைகளை தகர்த்தே போராட்டம்!
x
தினத்தந்தி 17 July 2018 6:55 AM GMT (Updated: 17 July 2018 6:55 AM GMT)

மோசமான சாலைகளை சீர் செய்ய வலியுறுத்தி, சாலைகளை தகர்த்தே மகராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மோசமான சாலைகளால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், மராட்டிய ஆளும் பாஜக அரசை அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மகராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியினர், ஒரு படிமேலே சென்று, மராட்டிய மாநில நிர்வாகத்தின் தலைமையகம் அமைந்துள்ள மந்திராலாயாவுக்கு செல்லும் நடைபாதைகள் மற்றும் சாலைகளை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியினர், வெளியிட்டுள்ள வீடியோவில்,  மந்திராலாயா அமைந்துள்ள பகுதியில் இருபுறமும் உள்ள நடைபாதைகள் மற்றும் சாலைகளை, கூர்மையான இரும்பு ஆயுதங்களால் தகர்த்து எடுக்கின்றனர். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ”புதிய சர்ஜிக்கல் ஸ்டிரக்” என்று, இந்த செயலுக்கு பெயர் சூட்டியுள்ளது. சாலைகளை தகர்த்த எட்டு பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். சாலைகளை தகர்க்கும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எம்.என்.எஸ் கட்சி நிர்வாகி ருபேஷ் ஒவல்கெரும் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் நவி மும்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள நாற்காலி, அலமாரி, கணிணி உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தி போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தற்போது சாலைகளையும் தகர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story