ரெயில்வே துறைக்கு வேலை செய்யவே வந்தோம்; வீடு கட்ட அல்ல: மத்திய மந்திரிக்கு ரெயில்வே ஊழியர் கடிதம்


ரெயில்வே துறைக்கு வேலை செய்யவே வந்தோம்; வீடு கட்ட அல்ல:  மத்திய மந்திரிக்கு ரெயில்வே ஊழியர் கடிதம்
x
தினத்தந்தி 17 July 2018 11:26 AM GMT (Updated: 17 July 2018 11:26 AM GMT)

ரெயில்வே துறைக்கே வேலை செய்யவே வந்தோம் என்றும் வீடு கட்ட அல்ல என்றும் மத்திய மந்திரி கோயலிடம் ரெயில்வே ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ரெயில்வே துறை மந்திரியாக கடந்த வருடம் செப்டம்பரில் பியூஷ் கோயல் பொறுப்பேற்று கொண்டார்.  அதன்பின்னர் அவர், உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் இளநிலை அதிகாரிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த உத்தரவினை அடுத்து குரூப் டி பிரிவில் இருந்து கேங்மென் மற்றும் டிராக்மேன் உள்பட 10 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள், மூத்த அதிகாரிகளின் வீடுகளில் இருந்து வெளியேறி ரெயில்வே துறையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணியில் மீண்டும் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஆனால் அவர்களில் டிராக்மேன் தர்மேந்திர குமார் மற்றும் அவரது 5 சக பணியாளர்கள் விடுவிக்கப்படவில்லை.  இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 13ந்தேதி மந்திரி கோயலுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.  அதில், தன்னையும் மற்றும் பிற 5 டிராக்மேன்களையும் தனது மூத்த அதிகாரியான பிரிவு பொறியாளர் ராஜ்குமார் வர்மா அவரது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், எங்களை ஒப்பந்த தொழிலாளர்கள் போல் பயன்படுத்தி கொண்டார்.  ரெயில்வே துறையில் பணி செய்யவே நாங்கள் இங்கு இணைந்தோம்.  எங்களது மூத்த அதிகாரிகளுக்கு பணி செய்ய அல்ல.  இதற்கு மறுத்தபொழுது, சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார்.  பிற மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல ரெயில் தடம் புரளும் சம்பவங்கள் நடக்கும்பொழுது, வீடு கட்ட அவருக்கு எப்படி நான் உதவ முடியும்? அவருக்கு உதவ மறுத்த நாட்களில் பணிக்கு வரவில்லை என பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ரெயில்வே ஊழியர்கள் வீடு கட்டும் வீடியோவை எடுத்து வைத்துள்ளேன் என கூறியுள்ள அவர், இதற்கு எதிராக மத்திய மந்திரி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.


Next Story