ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் 2 மாதக்குழந்தை உயிரிழப்பு


ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் 2 மாதக்குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 July 2018 8:42 AM GMT (Updated: 18 July 2018 8:42 AM GMT)

ஆம்புலன்ஸின் கதவு திறக்காததால் 2 மாதக்குழந்தை உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Raipur

ராய்ப்பூர்,

சட்டீஸ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட்டத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்று ஆம்புலன்ஸின் கதவு திறக்க முடியாததால் மூச்சு திணறி பலியானது.

முன்னதாக ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் ஒரு தம்பதி தங்கள் 2 மாத கைக்குழந்தையுடன் வந்திறங்கினர். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையின் தந்தை 108-ஆம்புலன்ஸிக்கு போன் செய்தார். உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் குழந்தையை ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த அம்பேத்கர் மருத்துவமனைக்கு சென்றது.

மருத்துவமனை சென்ற ஆம்புலன்ஸில் எதிர்பாராதவிதமாக கதவு திறக்க முடியாமல் ஜாம் ஆனது. டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. அதன் பிறகு மெக்கானிக் மூலம் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் கதவு திறப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆனதால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story