தெலுங்குதேசம் கட்சி சார்பில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நாளை ஓட்டெடுப்பு


தெலுங்குதேசம் கட்சி சார்பில் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நாளை ஓட்டெடுப்பு
x
தினத்தந்தி 19 July 2018 12:15 AM GMT (Updated: 18 July 2018 9:05 PM GMT)

மோடி அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடக்கிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஏனைய உறுப்பினர்களும் வந்து இருந்தனர்.

பிரதமர் மோடி, சபையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி தலைவர்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். அதைத் தொடர்ந்து மறைந்த 3 முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசித்தார்.

அதைத் தொடர்ந்து சபாநாயகர் கேள்வி நேரத்தை அறிவித்த உடனேயே தெலுங்குதேசம், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு போர்க்கோலம் பூண்டனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று பல்வேறு பிரச்சினைகளையொட்டி முழங்க சபையில் அமளி ஏற்பட்டது.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “கேள்வி நேரம் முடிந்ததும் பிரச்சினைகளை விவாதிக்கலாம், இப்போது அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பின்னர் பூஜ்ய நேரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக அவர் கூறினார்.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், பல்வேறு பிரச்சினைகளால் சபையில் தொடர் அமளி நிலவியதால் ஏற்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது நினைவுகூரத்தக்கது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த முறை போலவே இந்த முறையும் தெலுங்குதேசம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.

தெலுங்குதேசம் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட்ட உடனேயே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, “பெரிய கட்சியான எங்கள் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம்தான் முதலில் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், “பெரிய கட்சியா, சிறிய கட்சியா என்பது அல்ல கேள்வி. விதிகளின்படிதான், தீர்மானத்தை முதலில் கொண்டு வந்த கட்சி அழைக்கப்பட்டு உள்ளது” என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பதில் அளித்தார்.

ஆனாலும் விடாத மல்லிகார்ஜூன கார்கே, “நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ள அனைத்து உறுப்பினர்களும் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியபோது சபாநாயகர் கோபம் அடைந்து, “நான் விதிகளின்படிதான் முடிவு எடுத்து உள்ளேன். விதிகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், “பல்வேறு கட்சிகளாலும் கொண்டுவரப்பட்டு உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார். பிரதமர் மோடி மீது ஒட்டுமொத்த தேசமும் நம்பிக்கை கொண்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நாளை (20-ந் தேதி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள் முழுவதும் விவாதம் நடத்தப்படும். அதன்பின்னர் ஓட்டெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதையொட்டி நாளை சபையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பிற எந்த அலுவலும் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் திரிவேதி, விவாதத்தை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமைக்கு ஒத்தி போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆதரித்தார்.

ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விட்டது. இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் கூறும்போது, “விவாதம் என்றைக்கு, எந்த நேரத்தில் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து விட்டால் அதில் மாற்றத்துக்கு இடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இதில் அதிருப்தி அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து உள்ள நிலையில், முதல் முறையாக நாளை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும்கூட, அது ஓட்டெடுப்பில் வெற்றி பெறாது என்பதை சபையில் தற்போது உள்ள கட்சிகளின் பலம் தெளிவாக காட்டுகிறது.

535 உறுப்பினர்களைக் கொண்டு உள்ள மக்களவையில் பாரதீய ஜனதா கட்சிக்கு சபாநாயகருடன் சேர்த்து 274 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆதரிக்கிற பிற சிறிய கட்சிகளின் உறுப்பினர்களையும் கணக்கில் கொள்கிறபோது பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசுக்கு மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இருப்பினும் நேற்று சபைக்கு வெளியே டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் “நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற எதிர்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லையே?” என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு அவர், “எங்களுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்று யார் சொன்னது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

ஆக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து உள்ள எதிர்க்கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவோம் என கூறும் வேளையில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசோ நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ‘சந்திக்கத் தயார்’ என கூறி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story