கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி


கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி
x
தினத்தந்தி 19 July 2018 11:40 AM GMT (Updated: 19 July 2018 11:40 AM GMT)

“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” என கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு கலப்பு திருமண தம்பதி கேள்வியை எழுப்பியுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. கேரளாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஹிரிசனுக்கும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சஹானாவிற்கும் கடந்த திங்களன்று திருமணம் நடந்தது. இப்போது அவர்கள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட  அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஹரிசன் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள வீடியோ செய்தியில், “இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம், திருமணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தேன். அதனையடுத்து எங்களுக்கு அதிகமான கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எஸ்டிபிஐ அமைப்பும் எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறது. எங்களை கொன்றுவிடோம் என அவர்கள் மிரட்டுகிறார்கள், என்னுடைய பெற்றோர்களையும் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. எங்களுடன் என்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள். எங்களால் காவல் நிலையமும் செல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை,” என பேசியுள்ளார். 
 
சஹானா பேசுகையில், “எங்களுடைய உறவு மற்றும் திருமணத்தின் போதும் நாங்கள் மதம் மற்றும் ஜாதி பற்றி எதுவும் நினைத்தது கிடையாது. இப்போது என்னுடைய குடும்பத்தார் எங்களையும், என்னுடைய கணவர் குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். நான் ஒரு இஸ்லாமியர், என்னுடைய கணவர் கிறிஸ்தவர், நாங்கள் இருவரும் மதற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் வலியுறுத்தவில்லை. நான் என்னுடைய கணவருடன் வாழ வேண்டும், உயிரிழக்க விரும்பவில்லை. எங்களை கொலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

கேரளாவில் சமீபத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கெவின் ஜோசப், மணப்பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 21 வயதான கெவின் கொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசும் ஹரிசன், “கெவின் ஜோசப் போன்று ஒரு செய்தித்தாள் செய்தியாக என்னுடைய வாழ்க்கை முடிந்துப் போவதை நான் விரும்பவில்லை,” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story