ராகுல்காந்தி கட்டித்தழுவியதால் பிரதமர் மோடி கட்டாயம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்: சுப்ரமணியசாமி கருத்து


ராகுல்காந்தி கட்டித்தழுவியதால் பிரதமர் மோடி கட்டாயம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்: சுப்ரமணியசாமி கருத்து
x
தினத்தந்தி 22 July 2018 12:30 AM GMT (Updated: 22 July 2018 12:12 AM GMT)

ராகுல்காந்தி கட்டித்தழுவியதால் பிரதமர் மோடி கட்டாயம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மூத்ததலைவர் சுப்ரமணியசாமி சர்ச்சைக்கருத்து கூறியுள்ளார். #Subramaniansamy #NoConfidenceMotion

புதுடெல்லி,

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இத்தீர்மானத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், கடந்த வெள்ளியன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இந்நிலையில் வாக்கெடுப்பு நடைபெறும் முன்னர், பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசி முடிக்கும்போது, தன்னைச் சிறுவன் எனப் பிரதமர் மோடி நினைத்தாலும், நான் அவரை வெறுக்கவில்லை என்று கூறி, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டித் தழுவினார். பிரதமர் மோடியும் ராகுலை அழைத்துக் கைகொடுத்தார். 

இதனிடையே ராகுல்காந்தியின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, “எல்லோர் முன்னிலையிலும் ராகுல்காந்தி திடீரென பிரதமரை கட்டித்தழுவியிருக்க கூடாது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை. இச்செயல் முற்றிலும் நியாயமற்றது. இது போன்ற செயல்களை கட்டாயமாக ஆதரிக்க கூடாது. மேலும் எதிர்காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணிய சாமி, “ராகுல் தம்மைக் கட்டிப்பிடிக்கப் பிரதமர் மோடி அனுமதித்திருக்கக்கூடாது. ரஷ்யர்களும், வட கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசியைச் செலுத்த, இந்த முறையைத்தான் கடைப்பிடிப்பார்கள். அதனால் பிரதமர் மோடி, வெகு விரைவாக மருத்துவமனை சென்று, தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியசாமியின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸார் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story