தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய ராகுல்காந்திக்கு அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு


தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய ராகுல்காந்திக்கு அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 22 July 2018 11:00 PM GMT (Updated: 22 July 2018 6:26 PM GMT)

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய ராகுல்காந்திக்கு அதிகாரம் அளிப்பது என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி, 

காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே, கரண் சிங் போன்றோர் விடுவிக்கப்பட்டு புதிய காரிய கமிட்டிக்கு 23 உறுப்பினர்கள், 18 நிரந்தர உறுப்பினர்கள், 10 சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

புதிய காரிய கமிட்டி கட்சியின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனுபவமும், சக்தியும் கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.

தற்போதைய பா.ஜனதா அரசு தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் போராடவேண்டும். மக்களின் குரலை காங்கிரஸ் ஒலிக்கவேண்டும்.

நமது கட்சிக்கு அடிப்படை ஓட்டுகளை அதிகரிக்கவேண்டியது நமது மிகப்பெரிய பணிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் நமக்கு வாக்களிக்காதவர்களை கண்டறிந்து அவர்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் நமக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்கும் முயற்சிகளில் கட்சித் தொண்டர்கள் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோனியா காந்தி பேசுகையில், “ஜனநாயகத்தில் சமசரம் செய்துகொள்ளும் ஆபத்தான ஆட்சியை மத்தியில் இருப்போர் நடத்தி வருகின்றனர். தற்போது நாட்டில் நலிவடைந்தோரும், ஏழைகளும் அச்சத்துடன் வாழ்கின்றனர். பிரதமர் மோடி வாய்ச்சொல் ஆட்சியால் மக்கள் மிகுந்த துயரத்துக்கும் உள்ளாகி உள்ளனர். மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த அரசை அகற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைவதற்கு உறுதி கொள்வோம்” என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, “மோடியின் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் மற்றும் வெற்று கோஷ கலாசாரம் எதற்கும் உதவாது. அவருடைய கொள்கைகள் நாட்டின் வளர்ச்சி வேகத்துக்கு எதிராக உள்ளன. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறுகிறார். அதற்கு 14 சதவீத விவசாய வளர்ச்சி விகிதம் அவசியம் தேவை. ஆனால் அதற்கான அறிகுறி எதையுமே காணவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

நேற்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த உத்திகளும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி அமைப்பது மற்றும் தேர்தல் பிரசார குழுவை அமைப்பது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு வழங்க காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பார்வையற்ற வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக ‘பிரைலி எபிக்’ அட்டை முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு பாராட்டு தெரிவித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை எளிதாக்கிட கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று கூறி உள்ளார்.

Next Story