சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்: முதல் இடத்தை கேரளா தக்க வைத்தது


சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்: முதல் இடத்தை கேரளா தக்க வைத்தது
x
தினத்தந்தி 22 July 2018 11:45 PM GMT (Updated: 22 July 2018 8:10 PM GMT)

இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடம் வகிக்கிறது. மேலும் கேரளா மாநிலம் முதலிடத்தை தக்க வைத்தது.

பெங்களூரு, 

நிர்வாகம், ஆட்சித் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் (பி.ஏ.சி.) என்ற அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இந்த அமைப்பு கர்நாடகத்தில் செயல்படுகிறது. குடிநீர், சாலை, மின்சாரம், சாக்கடை போன்ற வசதிகள் மக்களுக்கு கிடைப்பதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. அந்த அமைப்பு சார்பில் நடப்பு ஆண்டுக் கான ஆட்சித் திறன் பட்டியலை பெங்களூருவில் நேற்று வெளியிட்டது. அதன் தலைவர் கஸ்தூரி ரங்கன் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

பெரிய மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் ஆட்சித் திறன் பிரிவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக கேரளா முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது. தமிழகம் 2-வது இடத்திலும், தெலுங்கானா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3, 4, 5-வது இடங்களையும் பிடித்தன. இந்த வரிசையில் பீகார் மாநிலத்துக்கு கடைசி இடம் கிடைத்தது.

குழந்தைகளின் நலன்கள் குறித்த விஷயத்தில் கேரளா முதல் இடத்தையும், தமிழகம் 2-வது இடத்தையும், பஞ்சாப், அரியானா, ஒடிசா ஆகியவை முறையே 3, 4, 5-வது இடங்களையும் பிடித்தன.

Next Story