பிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு


பிரதமர் மோடியின் “மிருகத்தனமான புதிய இந்தியா” ராகுல் காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 23 July 2018 9:28 AM GMT (Updated: 23 July 2018 9:28 AM GMT)

ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொடூரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. #RahulGandhi


புதுடெல்லி,

 பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. 

இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. 

இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு பாதுகாவலர்கள் அப்பாவி அக்பர் கானை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. பசுக்களை வாங்கிக் கொண்டு சொந்த ஊர் சென்றவர்கள் மீது இந்த கொடூரம் நடத்தப்பட்டது. இவ்விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

பசுக்களை பாதுகாத்த போலீஸ்
 
குல்பல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அக்பர் கானினை போலீஸ் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் காயம் அடைந்த அக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக 4 மணி நேரம் தன்னுடைய காவலில் வைத்து விசாரித்துள்ளது. போலீஸின் மொத்த கவனமும் பசுக்கள் மீதுதான் இருந்துள்ளது. அக்பர் கானை சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத போலீஸ் பசுக்களை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதுவும் ஒரு மணி நேரம் செலவு செய்து. 

ஆனால் உயிருக்கு போராடிய ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 4 மணி நேரங்கள் காலம் தாழ்த்தியுள்ளனர், இதுவும் அக்பர் கானின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் கும்பல் தாக்குதல் விவகாரம் காங்கிரஸ் கட்சியால் எழுப்பப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை எனவும் விமர்சனம் செய்யப்பட்டது. கும்பல் தாக்குதல் சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநிலங்களை சார்ந்தது என மத்திய அரசு விலகுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்று சிறை சென்று திரும்பியவர்களுக்கு சமீபத்தில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா மாலை மரியாதை அளித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது, பின்னர் வருத்தம் தெரிவித்தார். இதுபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை நடத்தியது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் குற்றம் சாட்டின. 

மிருகத்தனமான புதிய இந்தியா

இப்போது அல்வார் தாக்குதல் விவகாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போலீஸ் காட்டிய அலட்சியம் தொடர்பான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் செல்லும் வழியில் டி-ப்ரேக் எடுத்துள்ளனர். இதுதான் மோடியின் ஒரு மிருகத்தனமான இந்தியா, இங்கு மனிதநேயம், வெறுப்பால் அகற்றப்பட்டுள்ளது, மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என கடும் கோபத்துடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 


Next Story