மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.யின் பேச்சுக்கு அ.தி.மு.க. ஆதரவு


மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி.யின் பேச்சுக்கு அ.தி.மு.க. ஆதரவு
x
தினத்தந்தி 24 July 2018 11:10 PM GMT (Updated: 24 July 2018 11:10 PM GMT)

மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

புதுடெல்லி,

தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிரெதிர் துருவத்தில் பயணம் செய்யக் கூடிய கட்சிகளாக திகழ்பவை. எப்போதாவது அபூர்வமாக பொது வி‌ஷயங்களில் ஒன்று சேருவதுண்டு.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நேற்று கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக வங்கிகள் கடன் அளிப்பதில் காட்டும் கெடுபிடி குறித்து பேசியபோது அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.

பூஜ்ய நேரத்தில் திருச்சி சிவா பேசும்போது கூறியதாவது:–

வங்கிகள் மாணவர்களின் மேற்படிப்புக்காக கல்விக் கடன்களை வழங்குகின்றன. ஆனால் இந்த பணத்தை அவர்கள் குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தும்போது பல்வேறு பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டி உள்ளது.

கடன் அளிக்க அனுமதி அளித்த காலம் முதல், பணத்தை திரும்பச் செலுத்த தொடங்குவது வரையிலான இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் அதிக வட்டி விதிக்கின்றன. மேலும் கடன் வாங்கிய மாணவர்கள் அதை செலுத்தாவிட்டால் அதை வாராக்கடன் பட்டியலிலும் சேர்க்கின்றனர். இது, மாணவர்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் கடன் பெறுவதில் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

எனவே மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படவேண்டும். அல்லது அதை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததுடன் இதே கோரிக்கையை அவர்களும் எழுப்பினர்.


Next Story