முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ பக்கத்தில் தகவல் திருட்டு


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ பக்கத்தில் தகவல் திருட்டு
x
தினத்தந்தி 27 July 2018 11:00 PM GMT (Updated: 27 July 2018 9:55 PM GMT)

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ பக்கத்தில் இருந்து தகவல் திருடப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, கலாமின் சகோதரர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

‘மக்களின் ஜனாதிபதி’ என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை 27–ந் தேதி மரணமடைந்தார். நேற்று அவரது 3–ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்த கலாம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். இதற்காக @apjabdulkalam என்ற டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் பக்கம் ஒன்றையும் பயன்படுத்தி வந்தார். இவற்றின் மூலம் அவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர்.

அப்துல் கலாம் மறைவுக்குப்பின் அவரது ‘டுவிட்டர்’ கணக்கு மாற்றப்பட்டு இருப்பதுடன், அதில் இருந்த பின்தொடர்பாளர்கள் அனைவரும் @kalamcenter என்ற டுவிட்டர் கணக்குக்கும் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கு, கலாமிடம் பகுதி நேர உதவியாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவருக்கு சொந்தமானதாகும்.

மேலும் கலாம் பெயரில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் இயங்கி வருவதாகவும், இதில் ஒன்றை ‘கலாம் சென்டர்’ என்ற பெயரில் டெல்லியில் ஸ்ரீஜன்பால் சிங் நடத்தி வருவதாகவும் கலாம் குடும்பத்தின் சட்ட ஆலோசனைக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த அமைப்புகள் மூலம் சட்ட விரோதமாக நன்கொடைகள் வசூலிப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

கலாமின் மறைவை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், அவரது டுவிட்டர் கணக்கை மாற்றிய ஸ்ரீஜன்பால் சிங்கிடம் இது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் கலாமின் சொந்த டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமையை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வெறும் 27 பின்தொடர்பாளர்களுடன் கலாமின் டுவிட்டர் கணக்கை அவர் ஒப்படைத்தார். தற்போது அதில் 1000 பின்தொடர்பாளர்களே உள்ளனர். மேலும் அந்த கணக்கில் கலாம் பதிவு செய்திருந்த சிந்தனைப்பதிவுகள் அனைத்தும் திருடப்பட்டு இருக்கிறது. இது கலாம் குடும்பத்தினருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கலாமின் பொக்கி‌ஷமாக கருதப்படும் அவரது டிஜிட்டல் சொத்துக்களை அவருடன் பணி செய்தவர்கள் உள்பட சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ராணுவம், உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கலாமின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் தகவல் திருடப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story