கருணாநிதி குறித்து மார்கண்டேய கட்ஜு கருத்து ! இந்த நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா?


கருணாநிதி குறித்து மார்கண்டேய கட்ஜு கருத்து !  இந்த நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா?
x
தினத்தந்தி 31 July 2018 9:25 AM GMT (Updated: 31 July 2018 9:25 AM GMT)

கருணாநிதி குறித்து மார்கண்டேய கட்ஜு வெளியிட்டு உள்ள கருத்து இந்த நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா? என கேள்வி எழுப்பி உள்ளது. #MarkandeyaKatju #DMK #Karunanidhi

புதுடெல்லி

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் கருணாநிதி குணம்பெற வேண்டி தொண்டர்கள் கோவில்கள், சர்ச்சுகள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர். சற்று தீவிரமான தொண்டர்கள் மொட்டை அடித்தும் வழிபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் திமுக மற்றும் கருணாநிதியின் பரம எதிரிகளாக இருந்த அதிமுகவினர் கூட கருணாநிதி குணம் பேற வேண்டும் என தெரிவித்துள்ளனர். கருணாநிதி உடல் நலம் குன்றிய முதல் நாளே துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று நலம் விசாரித்தனர்.

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். இதே போன்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் கருணாநிதி நலம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர். இன்று காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியைப் பார்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தருகிறார்.

இப்படி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலரும் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று எழுந்து வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி மீது தமிழர்கள் மிகுந்த பரிதாபப்படுகிறார்கள். ஆனால் கருணாநிதி அரசியலுக்கு வரும் முன் அவரது சொத்து மதிப்பு என்ன? இப்போது கருணாநிதி, அவரது மனைவிகள். ஸ்டாலின், கனிமொழி, மாறன் பிரதர்ஸ் மற்றும் அவரது உறவினர்கள் சொத்து மதிப்பு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காமராஜர் உயிரிழந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை. ஆனால் தற்போது இது தலைகீழாக உள்ளது என கருணாநிதி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


Next Story