நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கு; நடிகை பிரீத்தி ஜிந்தா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கு; நடிகை பிரீத்தி ஜிந்தா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2018 2:05 PM GMT (Updated: 1 Aug 2018 2:05 PM GMT)

தொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கை முடித்து வைக்கும் மனு மீது பதிலளிக்க நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மும்பை,

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் தொழிலதிபர் நெஸ் வாடியா.

மும்பையில் உள்ள வான்கெடே மைதானத்தில் கடந்த 2014ம் ஆண்டு மே 30ந்தேதி இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது.  இந்த போட்டியின்பொழுது, தனது கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டார் என வாடியா மீது பிரீத்தி புகார் கூறினார்.

தொடர்ந்து அதே வருடம் ஜூன் 13ந்தேதி வாடியாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வருடம் பிப்ரவரியில் வாடியாவுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கை ஒன்றை போலீசார் தாக்கல் செய்தனர்.  இதனை தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வாடியா மனு செய்துள்ளார்.

அதில், தனிப்பட்ட விரோதத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அந்த சம்பவம் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் வாடியா தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய விசாரணையை நீதிபதிகள் சாவந்த் மற்றும் ரேவதி மொஹிதே அடங்கிய அமர்வு இன்று மேற்கொண்டது.  இதில், வாடியா தரப்பு வழக்கறிஞர், புகார் அளித்தவர் திருமணம் முடித்து விட்டார்.  இருவரும் (வாடியா மற்றும் பிரீத்தி) தற்பொழுது நடந்து முடிந்த ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலத்தில் ஒன்றாகவே பங்கேற்றனர்.  எனவே, வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து நீதிபதிகள், இந்த மனு மீது பதிலளிக்க பிரீத்தி ஜிந்தாவுக்கு உத்தரவிட்டனர்.  அதன்பின் வழக்கை ஆகஸ்டு 20ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.


Next Story