உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை


உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை
x
தினத்தந்தி 3 Aug 2018 4:51 AM GMT (Updated: 3 Aug 2018 4:51 AM GMT)

உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சஹஜான்பூர்,

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, காவி வர்ணம் பூசுவதை அரசு கைவிட்டது. 

இந்த நிலையில், சஹஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பந்தா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

20 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த சிலையில், மூக்கு கண்ணாடி மற்றும் கையில் தடி ஆகிய இரண்டும் கருப்பு நிறத்திலும், ஆடைகள் வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென இரவோடு இரவாக, காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சியின் வேலைதான் இது எனவும், நாங்கள் கடுமையான எதிர்பை பதிவு செய்வோம் என்று தெரிவித்து உள்ளது. 

Next Story