8 மாத இழுபறி முடிவுக்கு வந்தது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கே.எம்.ஜோசப் நியமனம்: மத்திய அரசு ஒப்புதல்


8 மாத இழுபறி முடிவுக்கு வந்தது, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக கே.எம்.ஜோசப் நியமனம்: மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 3 Aug 2018 11:30 PM GMT (Updated: 3 Aug 2018 9:22 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இப்பிரச்சினையில் கடந்த 8 மாதமாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை அவ்வப்போது சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நிரப்பி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் அவருக்கு போதிய வயது மூப்பு இல்லை என்பதை காரணம் காட்டி மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி இதை நிராகரித்து வேறு நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும், பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளின் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கே.எம்.ஜோசப்பின் பதவி உயர்வு பிராந்திய பிரதிநிதித்துவ கொள்கைக்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.

கே.எம்.ஜோசப் கேரள ஐகோர்ட்டில் நீதிபதி பணியைத் தொடங்கியவர் ஆவார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது, அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியான கே.எம்.ஜோசப் ஜனாதிபதி ஆட்சியை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது, அவருடைய பதவி உயர்வு மறுப்புக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் கொலிஜியம் கடந்த மே மாதம் 16-ந்தேதி கே.எம்.ஜோசப்பின் பெயரை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பணியிடத்துக்கு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசுக்கும், கொலிஜியத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் பரிந்துரையை முறைப்படி ஏற்றுக் கொண்டது.

இதேபோல் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகிய இருவருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வளிக்க கொலிஜியம் சிபாரிசு செய்திருந்ததையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இவர்களது நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 6-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுவதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயரும். எனினும், இவர்களின் நியமனத்துக்கு பிறகும் சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 6 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கும்.

Next Story