திருப்பதியில் நடந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவை நோக்கி பாய்ந்த கல்லூரி மாணவர்கள் கைது


திருப்பதியில் நடந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவை நோக்கி பாய்ந்த கல்லூரி மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 11:45 PM GMT (Updated: 5 Aug 2018 11:37 PM GMT)

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தாரகராம மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது.

நகரி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தாரகராம மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் ஒரு சிலர் கூட்டத்தில் இருந்து எழுந்து முதல்–மந்திரிக்கு எதிராக கோ‌ஷமிட்டபடி விழா மேடையை நோக்கி பாய்ந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கையில் அமரும்படி எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் சுமார் 20 மாணவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டபோதிலும், முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தொடர்ந்து பேசி தனது உரையை முடித்தார்.

அதன் பின்னர் கல்லூரி மாணவர் ஒருவர் முதல்–மந்திரியிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி மேடையே நோக்கி வேகமாக சென்றார். போலீசார் அவரை தடுத்த போதிலும் அதனை மீறி மேடைக்கு அருகே சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் வேகமாக ஓடி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மாணவர் சங்கங்கங்களின் தலைவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story